.

.

Wednesday, November 5, 2014

திரை விமர்சனம் - நெருங்கி வா முத்தமிடாதே!!!

5th of November 2014
சென்னை:பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டால், என்ன நடக்கும் என்ற தனது கற்பனைக்கு, திரைக்கதை அமைத்து லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் படம் தான் 'நெருங்கி வா முத்தமிடாதே'.

நாயகன் ஷபீர், ஏ.எல்.அழகப்பனிடம் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஷபீரின் அப்பாவான ஒய்.ஜி.மகேந்திரன் பெட்ரோல் பங்கு உரிமையாளராக இருக்கிறார்.

ஒரு நாள் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மக்கள் அனைவரும் பெட்ரோல், டீசல் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இந்த சமயத்தில் காரைக்காலில் இருந்து ஒரு தீவிரவாதி வெளிநாட்டிற்கு தப்பித்து செல்ல முயற்சி செய்கிறான். இதற்காக ஏ.எல்.அழகப்பனின் உதவியை நாடுகிறான். தீவிரவாதி தப்பித்து செல்ல 2000 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. அதற்கு அழகப்பன் தன்னிடம் வேலை செய்யும் ஷபீரிடம் டீசல் வேண்டும் என்று கேட்க, ஷபீர் தனது அப்பாவின் பெட்ரோல் பங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் 2000 லிட்டர் டீசலை எடுத்துக்கொண்டு, ஒரு லாரியில் காரைக்கால் துறைமுகத்திற்கு செல்கிறார்.

அவ்வாறு டீசலை உரிய இடத்தில் சேர்ப்பதற்கு செல்லும் ஷபீருக்கு, இந்த டீசல் தேச துரோகத்திற்கு பயன்பட போகிறது என்ற உண்மை தெரிய வருகிறது. உடனே இது குறித்து அழகப்பனிடம் ஷபீர் கேட்க, கோபம் அடையும் அழகப்பன், உன்னையும் உன் அப்பாவையும் போலீசில் மாட்டி விட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார்.

இறுதியில் ஷபீர் டீசலை கொடுத்து தீவிரவாதி தப்பித்து செல்ல உதவினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகன் ஷபீர் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பியாவிற்கு படத்தில் வேலையே இல்லை. ஏ.எல்.அழகப்பன் வில்லத்தனத்தில் சற்று முனெற்றம் தெரிகிறது.

ஒய்.ஜி.மகேந்திரன், தம்பி ராமையா என்று படத்தில் அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட சிறு வேலைகளை செவ்வனே செய்திக்கிறார்கள்.

மேட்லி பிளூசின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி  இசையும் சுமார் ரகம் தான்.

வினோத் பாரதி ஒளிப்பதி, ரொம்
பவே சாதாரணமாக உள்ளது. தேசிய நெடுசாலையில் முழு படமும் நடப்பது போல கதை அமைக்கப்பட்டிருந்தாலும், அதை கேமிரா நமக்கு சரியாக காண்பிக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள்ளேயே லாரியை ஓட விட்டு, நமது காதில் பூ சுத்தியிருக்கிறார்கள்.

ஒரு சாதாரண கருவை, முழு நீள படமாக எடுத்து நடிகையாக இருந்து இயக்குனராக உயர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன், தனது இரண்டாவது படத்தில் ஆக்ஷன் சப்ஜெக்ட்டை எடுத்ததற்காக அவரை பாராட்டினாலும், அதை எப்படி சொல்ல வேண்டும் என்பதில் பெரும் தடுமாற்றம் அடைந்துள்ளார்.

கருவை வெயிட்டாக பிடித்திருந்தாலும், அதை படமாக்குவதில் பட்ஜெட் உள்ளிட்ட காரணங்களால், திரைப்படமாக எடுக்காமல் ஏதோ, டாக்குமெண்டரி படம் போல எடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் நெருங்கி வா முத்தமிடாதே ரசிகர்களுக்கு நெருக்கம் இல்லாத படமாகவே உள்ளது.

No comments:

Post a Comment