.

.

Saturday, November 22, 2014

வன்மம்: திரை விமர்சனம்!!!

22nd of November 2014
சென்னை:தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை கொடுத்த படங்களை விட நட்புக்கு மரியாதை கொடுத்த படங்கள்தான் அதிகம். அந்த வரிசையில் நட்பை கதைக்களமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் படம்தான் வன்மம்.

ராதா (விஜய் சேதுபதி) செல்லதுரை (கிருஷ்ணா) இருவரும் நண்பர்கள். எப்படிப்பட்ட நண்பர்கள் என்றால் வேலை வெட்டி ஏதும் பார்க்காமல் ஜாலியாக தண்ணியப் போட்டுக்கிட்டு ஊரைச் சுத்துற பார்ட்டிங்க. செல்லதுரைக்கும் அந்த ஏரியா தொழிலதிபர் ரத்னம் தங்கச்சி வதனா (சுனைனா)வுக்கும் செம லவ்வு. இது தெரிஞ்ச ரத்னம் செல்லதுரையை அடிக்கப் போகிறாரு. அப்போ நடக்கிற சண்டையில ரத்னம் கொல்லப்படுகிறார். ரத்னம் கொலைக்கு தானும் ஒரு காரணமாகி விட்டோமே என்று நினைத்து வருந்துகிற ராதா ரத்னம் குடும்பத்துக்கு சில உதவிகளின் மூலம் ஆறுதலா இருக்கிறாரு. ரத்னத்தின் எதிரி ஜெ.பி.யின் தாக்குதலில் இருந்து ரத்னத்தின் குடும்பத்தை காப்பாற்றுகிறார் ராதா. ஒருநாள் செல்லதுரை பேசுகிற பேச்சினால் மனம் உடையும் ராதா அவரது நட்பை தூக்கி எறிகிறார். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது மீதி கதை.

வெள்ளை சட்டையும் வேஷ்டியுமாய் பெரிய மனிதர் தோரணையுடன் படம் முழுக்க வருகிறார் விஜய் சேதுபதி. படத்தின் மிக முக்கியமான கேரக்டர் இவருடையதுதான். இவர் நடிப்பினால் அந்த கேரக்டரை தூக்கி நிறுத்துகிறார். கிருஷ்ணா விஜய் சேதுபதியின் நண்பராக வருகிறார். ஆடல் பாடலுடன் தொடங்கும் இவர்களது காட்சிகள் இருவரின் நட்பின் இடைவெளிக்குப் பின்னர் வன்மமாய் நகருகின்றன. சுனைனா கொஞ்சம் உதட்டுச் சாயத்தைக் குறைத்தே போட்டிருக்கலாம். குளோஸ் அப் காட்சிகளில் சுனைனா முகத்தைக் காட்டும் போது அவரது உதடு மட்டும் தனித்தே தெரிகிறது…. 

விஜய் சேதுபதியின் அப்பாவாக நடித்திருக்கும் அந்த மனிதர் யார்…? அடேங்கப்பா… என்ன ஒரு எதார்த்தமான நடிப்பு. ‘உதவி செய்ய போயிதானே இப்படி ஆச்சு…? ஏம்பா நீ தலை குனிஞ்சி நிக்கலாமா?’ என்று விஜய் சேதுபதியின் நாடியை பிடித்து அவர் தலைநிமிர்த்தும் காட்சி செம. அவரே டப்பிங் பேசினாரோ… வேறு யாரும் டப்பிங் பேசினார்களோ… ஆனால் படத்திலேயே குமரி மாவட்டத்து வட்டார வழக்கு மொழியை சரியாக பேசுவதும் இவர் மட்டும்தான். ரத்னம் கார் டிரைவராக வரும் குட்டி மற்றும் இன்னொரு பையனும் நடிப்பில் ரெக்கை கட்டியிருக்கிறார்கள். ஜிவ்வென வேகத்துடன் வரும் ரத்னம் திடீரென கொல்லப்பட்டதும் திரையில் மட்டுமல்ல… திரையரங்கிலும் ஒரு நிசப்தம் நிலவுகிறது. ஜெபி, போஸ் வெங்கட், அம்மா நடிகை சிவரஞ்சனி, முத்துராமன் எல்லோருமே தங்கள் கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

வழக்கமான தமிழ் சினிமாக்கள் காட்டிய குமரி மாவட்டத்தின் இடங்களைத் தாண்டியும் சில ஏரியாக்களை பதிவு செய்திருக்கிறது பால பரணியின் கேமிரா. தமனின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கிறது. ‘பாடட்டா பாடட்டா’ தளாம் போட வைக்கும் பாடல் என்றால் ‘மனமே மனமே’ சோகமான பாடல் என்றாலும் மனதை கவரும் பாடல் இது. படத்தை இயக்கியிருக்கிறார் ஜெய் கிருஷ்ணா. இவர் குமரி மாவட்டத்துக்காரர் என்பதாலேயே இந்த பகுதியை களமாகக் கொண்டு வன்மம் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். முதல் பாதி சாதாரணமாக நகர்ந்தாலும், இடைவேளைக்குப் பிறகு ஆக்க்ஷன், கண்கலங்க வைக்கும் காட்சிகள் என்று படம் முழுக்க தேரோட்டியிருக்கிறார் இயக்குநர்.

No comments:

Post a Comment