.

.

Monday, November 10, 2014

திரை விமர்சனம்: ஜெய்ஹிந்த் 2!!!

10th of November 2014
சென்னை:அர்ஜுன் இயக்கி நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற 'ஜெய்ஹிந்த்' படத்திற்கும், தற்போது வெளியாகியிருக்கும் 'ஜெய்ஹிந்த் 2' படத்திற்கும் இடையே அர்ஜுன் என்ற பெயர் மட்டும் தான் சம்மந்தம், அதை தவிர வேறு ஒரு சம்மந்தமும் இல்லை.

ஏழை தொழிலாளி ஒருவர், தனது மகளை வசதி படைத்த பிள்ளைகள்  படிக்கும் பள்ளியில்  படிக்க வைக்க ஆசைப்படுகிறார். அவருடைய ஆசைப்படி, அந்த சிறுமிக்கு அந்த பள்ளியில் சீட் கிடைக்கிறது. ஆனால், குறிப்பிட்ட தேதியில் பள்ளிக்கு கட்ட  வேண்டிய ரூ.1 லட்சத்தை அவரால் கட்ட முடியாமல் போக, அந்த சிறுமியை பள்ளி நிர்வாகம் வெளியெற்றிவிடுகிறது. இதனால்  அந்த தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை செய்துக்கொள்கிறார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, தனியார் பள்ளிகளுக்கு எதிராக பொங்கி எழும் அர்ஜுன், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து அதில், இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும் தேசிய மயமாக்கி, அரசே நடத்த வேண்டும் என்றும், தனியார் பள்ளி உரிமையாளர்களுக்கு ஏற்ற இழப்பீட்டை கொடுத்துவிட்டு, பள்ளிகளை அரசு நடத்தினால், ஏழை, பணக்காரர்  என அனைவருக்கும் ஒரே கல்வி கிடைக்கும் என்றும் கூறுகிறார்.

அர்ஜுனின் இந்த பேச்சால், நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட, தனியார் பள்ளி உரிமையாளர்கள் அர்ஜுனுக்கு எதிராக அணி திரண்டு, அர்ஜுன் திட்டத்தையும் அவரையும் முறியடிக்க முயற்சிக்கிறார்கள்.

அவர்களுடைய முயற்சிகளை அர்ஜுன் முறியடித்து தான் நினைத்ததை செய்து முடித்தாரா அல்லது, அவர்களால் முறியடிக்கப்பட்டாரா? என்பது தான் படத்தின் கதை.

தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்படுவது தவறு என்பதை ஏற்றுக்கொண்டாலும், தனியார் பள்ளிகளை அரசு நிர்வகிக்க வேண்டும், என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்றாகும். தற்போது அரசு பள்ளிகளில் உள்ள கல்வி தரமே அதற்கு சான்று. இப்படி மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தை மையமாக வைத்து படம் நகர்வதால், படம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

அர்ஜுன் நடித்தாலும் சரி, காதல் செய்தாலும் சரி, நடனம் ஆடினாலும் சரி, அனைத்திலும் அவர் சண்டைப்போடுவது போல தான் இருக்கிறது. இந்த அனைத்தையும் இப்படத்தில் செய்வதற்கு அவருக்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், சண்டைக்காட்சிகளில் ரசிகர்களை ரொம்ப நிறைவுப் படுத்தியுள்ளார்.

சுர்வின் சாவ்லா, சிம்ரன் கபூர் என்று இரண்டு நாயகிகளுக்கும் படத்தில் பெரிய வேலை ஒன்றும் இல்லை.

மனோபாலா, மயில்சாமி, பிரேம்மானந்தம், ராகுல்தேவ், ரவிகாளே உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் திரையை நிரப்புவதற்காகவே பயன்பட்டிருக்கிறார்களே, தவிர ரசிகர்களின் மனதை யாரும் நிரப்பவில்லை.

அர்ஜுன் ஜெனியாவின் இசையில் பாடல்கள் புரியும்படி இருக்கிறது. கல்வி குறித்து எழுதப்பட்டுள்ள பாடலின் அர்த்தங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.

எச்.சி.வேணுகோபாலின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

கூலி தொழிலாளி ஒருவர் தனது சக்திக்கும் மீறி தனது மகளை, அவ்வளவு பெரிய தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டுமா? என்ற கேள்வி படம் பார்க்கும் அத்தனை பேருக்கும் எழுவதால், ஏற்றுக்கொள்ள முடியாத நிலையிலேயே முழு படமும் நகர்கிறது.

அதிலும், ஐந்து கதாபாத்திரங்களை  காட்டி, அவர்களைப் பற்றி தனி தனியாக கதை சொல்லும் விதமும் படத்திற்கு பவீனமாக உள்ளது. வெவ்வெறு கதையாக இருந்தால் பரவாயில்லை, அவர்கள் அத்தனை பேருக்கும் ஒரே கதை என்ற போதில், ஒன்றாக சொல்லியிருந்தாலே படத்தில் சற்று சுவாரஸ்யம் கூடியிருக்கும்.

ஆனால், ஒரே கதையில் உள்ள கதாபாத்திரங்களை, தனி தனியாக காண்பித்து நேரத்தை கடத்தும் இயக்குனர் அர்ஜுன், இரண்டாம் பாதியில் தான் தனது ஹீரோயிசத்தை காண்பித்திருக்கிறார்.

எதுவாக இருந்தாலும், அர்ஜுன் படம் என்றாலே ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் சண்டைக்காட்சி இப்படத்தில் அசத்தலாக இருக்கிறது. படத்தில் இடம்பெறும் ஐந்து சண்டைக்காட்சிகளிலும் அர்ஜுன் மிரட்டியிருக்கிறார்.  ஸ்டண்ட் மாஸ்டர் பவர்பாஸ்ட் பாபு மற்றும் பேங்காக் ஸ்டண்ட் மாஸ்டர் கஜூ இருவருக்கும் பாராட்டுக்கள்.

இந்த சண்டைக்காட்சிகளைப் போல, திரைக்கதையும் நச்சென்று இருந்திருந்தால், 'ஜெய்ஹிந்த்' போல இந்த 'ஜெய்ஹிந்த் 2' படமும் பெரும் வெற்றி பெற்றிருக்கும்.

No comments:

Post a Comment