.

.

Tuesday, August 4, 2015

அழகை விட தன்னம்பிக்கை மிகவும் முக்கியம்: ஸ்ருதிஹாசன் பேட்டி!!!

4th of August 2015
சென்னை:நடிகை சுருதிஹாசன், நடிகர் மகேஷ்பாபு ஜோடி யாக நடித்த ‘ஸ்ரீமந்துடு’ படம் 7–ந்தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் திரைக்கு வர உள்ளது. அதையொட்டி ஐதராபாத்தில் சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:–

கேள்வி:– ஸ்ரீமந்துடு சினிமாவில் உங்கள் கதாபாத்திரம் குறித்து...

பதில்:– இப்படத்தில் சாருசீல என்னும் கல்லூரி மாணவியாக நடித்தேன். மென்மையான அதே நேரத்தில் சுதந்திர எண்ணங்களுடன் கூடிய இளம் பெண் கதாபாத்திரம். சம்பிரதாயமாக இருந்தபடியே புதுமையான முறையில் ஆலோசிப்பேன். எனக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரம்.

கே:– விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறீர்கள். நிஜ வாழ்க்கையில் நீங்கள் எப்படி?

ப:– சர்வசாதாரணமானவள் நான். வீட்டிற்கு சென்றதும் எல்லா பெண்களையும் போல கலகலவென பேசுவேன். சந்தோஷம் ஏற்பட்டால் சத்தம் போட்டு சிரிப்பேன். கஷ்டம் வந்தபோது வேதனை படுவேன்.

கே:– உங்கள் தொழில் அழகு சம்பந்தப்பட்டதால் அழகு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்களா?

ப:– உண்மை தான். இது கிளாமரஸ் பீல்டு. எனவே அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ரசிகர்கள் நிராசையடைவார்கள். அதற்காக மணிக்கணக்காகவும் செலவிடமாட்டேன்.

கே:– படத்திற்கு படம் உங்கள் அழகு கூடி வருவது குறித்து...

ப:– நன்றி. சொல்லப்போனால் அதற்காக நான் பிரத்யேகமாக ஒன்றும் செய்யவில்லை. வயதோடு சேர்ந்து வரும் மெச்யூரிட்டி கூட அழகை கூட்டுகிறது.

கே:– அழகாக இருப்பதால் தன்னம்பிக்கை அதிகமாகுமா?

ப:– அப்படி ஒன்றும் இல்லை. ஸ்டைலாக இருக்க வேண்டும் என்பதற்காக தலைமுடிக்கு கலர் போடுவது, உதட்டுக்கு லிப்ஸ்டிக் போடுவது முக்கியமல்ல. நமக்குள் நாம் ஸ்டிராங்காக இல்லாவிட்டால் மேல் மெருகு எவ்வளவு செய்தாலும் பிரயோஜனம் இருக்காது.

நம்மீது நமக்கு நம்பிக்கை, தன்னம்பிக்கை இருந்தால் அழகாக இல்லாவிட்டாலும் அழகாகவே தெரிவோம். மேல் அழகு என்பது நம்பிக்கையில்தான் இருக்கிறது. அழகாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தன்னம்பிக்கை இல்லாவிட்டால் எதுவும் செய்ய முடியாது.

கே:– சினிமாவில் கிளாமராக இருக்கும் நீங்கள் நிஜவாழ்க்கையில்...

ப:– முடிந்தவரை மேக்கப் போட மாட்டேன். சிம்பிளாக உடை அணிவேன். சிகை அலங்காரமும் சிம்பிள்தான். கம்பர்டபுளாக இருக்கவே விரும்புவேன்.

கே:– படங்களை தேர்வு செய்வது குறித்து..

ப:– நான் எந்த கதாபாத்திரத்தை அங்கீகரித்தாலும் இதற்கு முன் நான் நடித்த கதாபாத்திரங்களின் சாயல் அதில் இல்லாமல் பார்த்துக் கொள்வேன். ஏனென்றால் ஒரே மாதிரியான படங்களில் நடித்து ரசிகர்களுக்கு அலுத்துவிடக் கூடாதல்லவா.

கே:– கமலஹாசன் மகள் என்பதால் சினிமா வாய்ப்புகள் சுலபமாக வருகிறதா?

ப:– அப்படி எதுவும் இல்லை. முதல் வாய்ப்பு சுலபமாக கிடைக்கும். ஒருவேளை நான் நன்றாக நடிக்கவில்லை என்றால் கமலஹாசன் மகளாச்சே என இரண்டாவது வாய்ப்பு தர மாட்டார்கள். நான் நடித்து திறமையை வெளிப்படுத்த வேண்டும். புதிய நடிகைகளுக்கு இருக்கும் அனைத்து நெருக்கடிகளும் எனக்கும் இருக்கும். இரண்டாவது படத்திலேயே என் பெற்றோர் மாதிரி திறமையை காட்டிவிட வேண்டும் என்னும், நெருக்கடியை சமாளிப்பது சாமான்யமில்லை.

கே:– சகோதரி அக்ஷராவுடன் சேர்ந்து நடிப்பீர்களா?

ப:– கதை அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்.

கே:– அக்ஷராவிற்கு நீங்கள் வழங்கும் ஆலோசனை?

ப:–என் அப்பா, அம்மா எனக்கு எந்த ஆலோசனைகளையும் வழங்கியதில்லை. இது உன் வாழ்க்கை. உன் விருப்பம். புத்திசாலித்தனமாக முடிவு எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். எப்போதாவது தேவை ஏற்பட்டால் ஆலோசனை வழங்குவார்கள். என் தங்கைக்கு நானும் அப்படித்தான்.

கே:– ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் அந்த சிந்தனையில் எவ்வளவு நேரம் இருப்பீர்கள்?

ப:– கேமரா முன் இருக்கும்வரைதான் அந்த மூடில் இருப்பேன். மற்ற நேரங்களில் சாதாரணமாக இருப்பேன்.

கே:– உங்களின் சொந்த ஊர் குறித்து...

ப:– பிறந்து வளர்ந்த சென்னைதான் சொந்த ஊர். அம்மா மும்பை என்பதால் அதுவும் சொந்த ஊரானது. தெலுங்கில் அதிக படம் பண்ணுவதால் தற்போது ஐதராபாத்தும் சொந்த ஊரானது.

No comments:

Post a Comment