.

.

Sunday, August 2, 2015

சகலகலா வல்லவன் – விமர்சனம்!!!

2nd of August 2015
சென்னை:தனது தந்தை பிரபுவின் பேச்சை மீறாத பிள்ளை ஜெயம் ரவி, ஊருக்குள் தனது போட்டியாளராக உலாவரும் எதிர் பார்ட்டி சூரியின் முறைப்பெண்ணான அஞ்சலியுடன் காதலில் விழுகிறார்.. இந்நிலையில் தனது மாமா ராதாரவியின் மகள் த்ரிஷாவின் திருமணத்திற்காக சென்னை செல்கிற ஜெயம் ரவி, திருமணத்தில் ஏற்படும் குழப்பம் காரணமாக, திடீர் மாப்பிள்ளையாக த்ரிஷாவின் கழுத்தில் தாலிகட்டவேண்டிய சூழல் உருவாகிறது.

பட்டணத்து பெண்ணான த்ரிஷா இந்த திடீர் திருமணத்தையும் படிக்காத ஜெயம் ரவியையும் வெறுத்து அவரை அருகில் அண்டவிடாமல் வேண்டா வெறுப்பாக குடும்பம் நடத்துகிறார்.. சென்னையில் தங்கியிருப்பதால் இதெல்லாம் தனது குடும்பத்திற்கு தெரியாமல் பார்த்துக்கொள்கிறார் ஜெயம் ரவி.

ஒருகட்டத்தில் த்ரிஷா தனக்கு டைவர்ஸ் தருமாறு கேட்க, கிராமத்திற்கு வந்து தன வீட்டில் பிரச்சனை எதுவும் பண்ணாமல் நல்ல மருமகளாக நடந்துகொண்டால் ஒரே மாதத்தில் டைவர்ஸ் பத்திரத்தில் கையெழுத்து போட்டுத்தருவதாக சொல்கிறார்.

கிராமத்திற்கு வரும் த்ரிஷாவின் மனதில் ஒரு மாதம் ஆகியும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பதுடன், இவர்கள் இருவருக்குமான பிரச்சனை ஜெயம்ரவியின் தந்தை பிரபுவுக்கும் தெரிய வருகிறது. த்ரிஷாவின் டைவர்ஸுக்கு மகனை ஒப்புதல் அளிக்க சொல்கிறார் பிரபு.. த்ரிஷாவின் எண்ணப்படியே எல்லாம் நடந்ததா என்பது க்ளைமாக்ஸ்.

கிராமத்து முரட்டுக்காளையாக வலம் வரும் ஜெயம் ரவி, கேப் கிடைக்கும்போதெல்லாம் சூரியை வாருவதும், அஞ்சலியுடன் ரொமான்ஸ் பண்ணுவதும் என முற்பாதி, கதை எதுவும் இல்லாமல் ‘கலகலப்பாக’ நகர்கிறது. அதே ஜெயம் ரவி தன்னை உதாசீனப்படுத்தும் த்ரிஷாவை தந்திர வித்தைகளை கையாண்டு வழிக்கு கொண்டு வந்திருந்தால் உண்மையான சகலகலா வல்லவனாக ஜொலித்திருக்கலாம்.

இரண்டாம் கதாநாயகன் என்கிற ரேஞ்சில் ஜெயம் ரவி வரும் காட்சிகளில் மட்டும் அல்ல, அவர் இல்லாத காட்சிகளில் கூட வந்து அதகளம் பண்ணுகிறார் சூரி.. அறுபது சதவீத இடங்களில் போரும் சிகசருமாக அடிக்கும் சூரி, காலிப்ளவர் வாங்கினால் அதில் உள்ள இலை வேஸ்ட் என்பது போல சில இடங்களில் சிங்கிள் தட்டவே சிரமப்படவும் செய்கிறார்.
கவர்ச்சி ப்ளஸ் காதல் கலாட்டாவுக்கு அஞ்சலி, திமிரு ப்ளஸ் ராங்கித்தனத்துக்கு த்ரிஷா என இருவரும் ஏரியாவாரியாக பிரித்து வெளுக்கிறார்கள். நின்றுபோக இருந்த திருமணத்தை நடத்தி, தன்னை திருமணம் செய்து தன் தந்தையின் மானத்தை காப்பற்றிய ஜெயம் ரவியை, காரணமே இல்லாமல் த்ரிஷா மோசமாக நடத்துவதில் லாஜிக் செமையாக இடிக்கிறது.

ஜெயம்ரவியின் தாய்மாமனாக நாட்டாமை & பசுபதியாக இருபது நிமிடமே வந்து டபுள் ஆக்சனில் கலக்குகிறார் விவேக்.. அண்ணனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, அதனால் கல்யாணமே ஆகாமல், அண்ணனைவிட வயதானவராக ஆகிப்போகும் விவேக்கை அவரது வேலைக்காரனாக வரும் செல் முருகன் வாரும் இடமெல்லாம் சரியான கலாட்டா. என்ன, டபுள் மீனிங் டயலாக் தான் கொஞ்சம் நெளிய வைக்கிறது.

மீசை எடுத்துவிட்டால் டெரர் காட்டுவதும், தன்னால் முன்பு போல கைதிகளை அடிக்க முடியாததால் தன்னைப்போன்ற ரோபோவை செட் பண்ணி கைதிகளை பெண்டு நிமிர்த்தி, இறுதியில் ஜெயம்ரவி-த்ரிஷாவின் டார்ச்சரால் பைத்தியமாகும் போலீஸ் அதிகாரியாக நான் கடவுள் ராஜேந்திரன் வரும் காட்சிகளில் எல்லாம் அப்ளாசை அள்ளுகிறார்.

பிரபு, ராதாரவியின் பண்பட்ட நடிப்பு படத்திற்கு ப்ளஸ்.. தமனின் இசையில் தெலுங்கு வாடை அடிக்கும் பாடல்கள் அன்னியப்பட்டு நிற்கின்றன. இனறைக்கும் கூட இயக்குனர் சுராஜின் ‘படிக்காதவன்’ படத்தையோ அல்லது அதில் இடம்பெற்ற காமெடி காட்சிகளையோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது சேனல் மாற்றாமல் பார்க்கும் பெருங்கூட்டம் உண்டு..

சிரிக்க வைக்கும் படம் தான் என்றாலும், சகலகலா வல்லவனால் அந்த ரிப்பீட் காமெடி பட்டியலில் இடம்பிடிக்க முடியாமல் போனதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. மற்றபடி கலகலப்புக்கு பஞ்சமில்லாத, காமெடிக்கு வஞ்சமில்லாத படம் என்பதில் சந்தேகம் இல்லை.

No comments:

Post a Comment