.

.

Wednesday, July 29, 2015

நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்: திரை விமர்சனம்!!!

29th of July 2015
சென்னை:திருட்டு இல்லை, பொய் சொல்லுதல் இல்லை, அடிதடி மோதல் இல்லை, அந்த ஊரில் உள்ள தலைவரிடம், சாக்கடை அடைத்துக்கொண்டிருக்கிறது என்று சொன்னால், இதோ, என்று அவரே சாக்கடையில் இறங்கி அதை சரி செய்துவிடுகிறார். இத விடுங்க மாமியார் - மருமகள் சண்டை இல்லை என்றால் பாத்துக்குங்க, அந்த ஊர் எப்படிப்பட்ட ஊராக இருக்கும்.

அப்படிப்பட்ட அந்த ஊரில் எதற்காக காவல் நிலையம், என்று கருதும் காவல் துறை, அந்த ஊரில் உள்ள போலீஸ் நிலையத்தை மூடிவிட்டு, அந்த காவல் நிலையத்தில் இருக்கும் நான்கு போலீசார்களை வேறு ஊருக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்கிறது.

அந்த நான்கு காவலர்களில் ஒருவர் தான் ஹீரோ அருள்நிதி. மற்ற மூவர், சிங்கம்புலி, பகவதி பெருமாள், ராஜ்குமார் ஆகியோர்.

திருடனை துரத்துவது, கொலையாளிகளை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்வது, ஊர் சண்டையில் அடிபடுவது, என்று  எந்தவிதமான வேலையும் இல்லாமல், போலீஸ் ஸ்டேஷனில் ஜாலியாக கேரம்போடு விளையாடிக் கொண்டிருக்கும் இந்த போலீஸ்காரர்களை, திடிரென்று போலீஸ் வேலை செய்ய சொன்னால் எப்படி, அதற்காக இந்த நான்கு போலீஸ்காரர்களும் இணைந்து, இந்த ஊரில் நிரந்தரமாக காவல் நிலையத்தை அரசாங்கம் நிறுவ வேண்டும், அதற்காக இந்த ஊரில் தவறு நடக்க வேண்டும், என்று நினைத்து அவர்களாகவே சில சிறு சிறு தவறுகளை, யாருக்கும் தெரியாமல் செய்கிறார்கள்.

அந்த சிறு சிறு தவறுகளால், அமைதியான அந்த ஊரில் எங்கும் நடக்காத அசம்பாவிதங்கள் நடக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த ஊரின் பாதுகாப்பிற்காக இராணுவமே வருகிறது என்றால் பாருங்களேன். அப்படி அங்கு என்ன தவறு நடந்தது, அந்த ஊர் மீண்டும் பழைய நிலைக்கு வந்ததா, என்பதை காமெடியாக சொல்லியிருக்காங்க.

அருள்நிதி, தொடர்ந்து கதாபாத்திரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடிக்கிறார். ஆனால் அதுவே தொடர் கதையாகிவிட்டால், நாளைக்கு ஹீரோ லிஸ்ட்டில் இருந்து ரசிகர்கள் தூக்கிடுவாங்க, என்பதை புரிந்துக்கொண்டு அடுத்தடுத்த படத்திலாவது, ஹீரோவாகவும் நல்ல படமாகவும் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கலாம்.

போலீஸ் கெட்டப்பில் பொருத்தமாக இருக்கும் அருள்நிதி, நடிப்பில் எந்த குறையும் இல்லாமல் பணிபுரிந்திருக்கிறார்.

நாயகி ரம்யா நம்பீசனுக்கு பெரிய வேலை ஒன்றும் இல்லை. ஒரே ஒரு பாடல் காட்சி, அதுவும் பிளாக் அண்ட்  ஒயிட் எபெக்ட்டில்.

படத்தில் ஹீரோவைக் காட்டிலும் சிங்கம் புலி தான், ஸ்கோர் செய்கிறார். அதிக காட்சிகள், காமெடி என்று அசத்தியிருக்கிறார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், படத்தில் அசத்திய பகவதி பெருமாள், ராஜ்குமார் இருவரும் தங்கள் பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
பி.ஆர்.ராஜனின்  இசையும், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

ஆங்கிலப் படம் ஒன்றின் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் இது என்று, இப்படத்தின் தயாரிப்பாளரே சொல்லிவிட்டார். தழுவலாக இருந்தாலும், தான் எடுத்துக்கொண்ட விஷயத்தை இயக்குனர் என்.ஜே.ஸ்ரீகிருஷ்ணா , ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார். ஆனால், சில இடங்களில் அவர் சொல்லிய விதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் காமெடியாக சொல்லியிருப்பதால், குறைகளைக்கூட நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு சிரித்துவிடுகிறார்கள் ரசிகர்கள்.

No comments:

Post a Comment