.

.

Thursday, January 22, 2015

இளையராஜாவுக்கு மரியாதை செய்த அமிதாப், ரஜினி, கமல்!!!

22nd of January 2015
சென்னை:ஆயிரமாவது படத்துக்கு இசை அமைக்கும் இளையராஜாவுக்கு மும்பையில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அமிதாப் பச்சன், ரஜினி, கமல் பங்கேற்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் இளையராஜா.

பாலா இயக்கும் தாரை தப்பட்டை படம் இளையராஜாவின் 1000வது படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. அந்தப் படத்தைத் தொடர்ந்து பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். இப்போதும் கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் இசையமைத்து வருகிறார் இளையராஜா.

உலக அளவில் இசைத் துறையில் இப்படி ஒரு சாதனையை எவரும் நிகழ்த்தியதில்லை. அதுவும் இளையராஜா இசையமைத்த 1000 க்கும் மேற்பட்ட படங்களில் 80 சதவீதம் பெரும் வெற்றி பெற்றவை. 4000 பாடல்களுக்கு மேல் சூப்பர் ஹிட் ரகத்தைச் சேர்ந்தவை. வெளியில் தெரிய வராத அவரது பாடல்களை இப்போது கேட்டாலும் அவற்றில் புதிய பரிமாணத்தை அனுபவிக்க முடியும்.

இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான இளையராஜாவுக்கு, பாலிவுட் திரையுலகம் பாராட்டு விழா எடுத்தது. இயக்குநர் பால்கி இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள, நடிகர் அமிதாப் பச்சனே முன் நின்று அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பினார். அவரது அழைப்பை ஏற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன், நடிகை ஸ்ரீதேவி என இந்தியாவின் மிக உன்னத கலைஞர்கள்.. சாதனையாளர்கள் இந்த விழாவில் பங்கேற்று, இசைஞானியின் பெரும் சாதனையைக் கவுரவித்து மகிழ்ந்தனர்.
இந்திய சினிமா என்றாலே, அது அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல் ஹாஸன்தான். இவர்களே இந்திய சினிமாவின் முகவரிகள். இவர்களன்றி இந்திய சினிமா பற்றி யாராலும் பேச முடியாது. இந்த மூன்று சிகரங்களும் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டது, அநேகமாக இதுவே முதல்முறை. காரணம் இந்த மூவருக்கும் பொதுவான இளையராஜா.

இந்த மூவர் குரலுக்கும் இசை தந்த பெருமை இளையராஜாவைச் சேரும். ரஜினிக்கும் கமலுக்கும் பல நூறு சூப்பர் ஹிட் பாடல்கள் தந்தவர் ராஜா. கமல் ஹாஸனின் அரிய குரலை, மிகச் சிறப்பாகப் பயன்படுத்திய ஒரே மேதை இளையராஜாதான். அவ்வளவு ஏன்... ரஜினியின் குரலில் முதல் பாடலைப் பதிவு செய்த பெருமைக்குரியவரும் ராஜாதான். அட, ஸ்ரீதேவியை முதல் முறையாக பாட வைத்தவரும் இளையராஜாதான் (மூன்றாம் பிறை... முன்ன ஒரு காலத்துல...) அமிதாப் பச்சனின் இணையற்ற குரலை பிட்லி சே... பாடலில் பயன்படுத்தி இன்று இந்தியாவையே மயங்க வைத்திருக்கிறார் இளையராஜா.

உலகில் சிம்பொனி என்ற இசை வடிவம், ஐரோப்பிய இசை மேதைகளுக்கே உரித்தானது என்று பலரும் நினைத்த நேரத்தில், வெகு அநாயாசமாக சிம்பொனி வடிவ இசையைத் தந்த மாபெரும் மேதை இளையராஜா ஒருவரே!
இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான இளையராஜாவை, முதலில் கொண்டாட வேண்டியது தமிழ் சினிமாதான். ஆனால் அவர்களை முந்திக் கொண்டது பாலிவுட். காரணம், இளையராஜாவின் தூய ரசிகரான இயக்குநர் பால்கி. இளையராஜா இசையில் தான் உருவாக்கியுள்ள ஷமிதாப் படத்தின் இசை வெளியீட்டை அப்படியே இளையராஜாவுக்கான பாராட்டு விழாவாக மாற்றி, நாட்டையே அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் இளையராஜா இசையில் தாம் பாடிய பிட்லி சே... பாடலை, மேடையில் பாடினார் அமிதாப் பச்சன். ரஜினிகாந்த், கமல் ஹாஸன், ஸ்ரீதேவி, அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் இளையராஜாவுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இன்று பிற்பகல் சென்னை திரும்புகிறார் இளையராஜா.

No comments:

Post a Comment