.

.

Saturday, December 27, 2014

ஏலத்துக்கு வருகிறது நடிகர் ரஜினி மனைவி சொத்து!!!

27th of December 2014
சென்னை:நடிகர் ரஜினி நடித்த, 'கோச்சடையான்' படத் தயாரிப்புக்காக வாங்கிய கடனை, 'மீடியா ஒன்' நிறுவனம் திருப்பிச் செலுத்தாததால், அதற்கு பிணையாகக் கொடுக்கப்பட்ட, நடிகர் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்தின், 22 கோடி ரூபாய் சொத்தை கையகப்படுத்த, இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கியான, 'எக்சிம்' நடவடிக்கை எடுத்துள்ளது.

ரஜினி, தீபிகா படுகோனே உட்பட பலர் நடித்த, 'கோச்சடையான்' திரைப்படம், மே, 23ம் தேதி வெளியானது. நாட்டிலேயே முதல் முறையாக முப்பரிமாண முறையில் (3டி), 'மோஷன் காப்சரிங்' என்ற புதிய தொழில்நுட்பத்தில் இப்படம் தயாரிக்கப்பட்டது. ரஜினியின் மகள் சவுந்தர்யா அஸ்வின் இயக்கிய இப்படத்தை, 'ஈராஸ்' நிறுவனத்துடன் இணைந்து, 'மீடியா ஒன் குளோபல் என்டர் டெயின்மென்ட்' நிறுவனம் தயாரித்தது.
கடன்:

மிகுந்த பொருட்செலவில் உருவான இந்த படத்தின் தயாரிப்பு செலவுகளுக்காக, 'மீடியா ஒன்' நிறுவனம், 'எக்சிம்' வங்கியிடம், 20 கோடி ரூபாய் கடனாக பெற்றதாக தெரிகிறது.இந்த கடனை பெறும் போது, ரஜினியின் மனைவி லதா ரஜினியின் பெயரில், சென்னை, பல்லாவரத்தை அடுத்த திருமுடிவாக்கத்தில் உள்ள சொத்தின் ஆவணங்கள் உத்தரவாதமாகக் கொடுக்கப்பட்டது. ஆனால், 'கோச்சடையான்' படம் வெளியாகி விட்ட பின், 'எக்சிம்' வங்கியில் வாங்கிய கடனை, 'மீடியா ஒன்' நிறுவனம் உரிய காலத்தில் செலுத்தவில்லை.இதனால், அந்த கடனுக்கு உத்தரவாதமாகக் கொடுக்கப்பட்ட ஆவணங்களுக்கு உரிய லதா ரஜினியின் சொத்தை உடைமையாக்கிக் கொள்ள, 'எக்சிம்' வங்கி முடிவு செய்தது.
அறிவிப்பு:

இது தொடர்பாக அந்த வங்கி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:'மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் கடன் கணக்கில், 2014 ஜூலை, 17ம் தேதி நிலவரப்படி, 22 கோடியே, 21 லட்சத்து, 85 ஆயிரத்து, 865 ரூபாய் வசூலாக வேண்டியுள்ளது. உரிய காலத்தில் இத்தொகை வசூலாகாததால், இதற்கு பிணையாகக் காட்டப்பட்ட, லதா ரஜினியின் பெயரில் உள்ள சொத்தை, வங்கியின் உடைமையாக்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது.கடந்த, 2002ல் பிறப்பிக்கப்பட்ட பிணைய பத்திரங்கள் மீதான, எட்டாவது வட்டி விதிகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தடை:

இதன்படி, இதில் பிணையமாக அளிக்கப்பட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, சென்னை, பல்லாவரத்தை அடுத்த திருமுடிவாக்கத்தில் சர்வே எண்: 237/3க்கு உட்பட்ட, 26 சென்ட், சர்வே எண்: 237/4க்கு உட்பட்ட, 37 சென்ட், சர்வே எண்: 236/2க்கு உட்பட்ட, 1.50 ஏக்கர் என மொத்தம், 2.13 ஏக்கர் நிலத்தை உடைமையாக்குவதற்கான, 'நோட்டீஸ்' பொது அறிவிப்பாக வெளியிடப்படுகிறது. எனவே, இச்சொத்தை அதன் உரிமையாளரான லதா ரஜினிகாந்த் அல்லது வேறு யாரும் விற்பது, வாங்குவது தொடர்பான எந்த நடவடிக்கையிலும் வங்கியின் கவனத்துக்கு வராமல் ஈடுபடுவது தடை செய்யப்படுகிறது.இவ்வாறு அந்த அறிவிப்பில், 'எக்சிம்' வங்கி தெரிவித்துள்ளது.
அடுத்தது என்ன?

இந்த அறிவிப்பின் படி, 'மீடியா ஒன்' நிறுவனம் கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால், உடைமையாக்கப்படும் சொத்தை பொது ஏலத்துக்கு விட்டு, நிலுவைத் தொகையை மீட்க வங்கி நடவடிக்கை எடுக்கும்.
'மீடியா ஒன்' நிறுவனம் விளக்கம்:

இதுகுறித்து, மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:'எக்சிம்' வங்கியிடம் எங்கள் நிறுவனத்தின் திருப்பிச் செலுத்தும் திறன் அடிப்படையிலேயே, 20 கோடி ரூபாய் கடன் வாங்கினோம்.இந்த தொகையை, 2015 மார்ச், 31ம் தேதிக்குள் திருப்பி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுடன் பேசி இருக்கிறோம். எனவே, இந்த கடனை நாங்களே திருப்பி செலுத்த ஏற்பாடு செய்து வருவதால் உத்தரவாதம் அளித்த லதா ரஜினிகாந்த், தேவேந்தர் ஆகியோரை வங்கி அணுக வேண்டிஇருக்காது.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த மாற்றங்கள்...:

'மீடியா ஒன்' நிறுவனத்தின் கடனுக்காக உடைமையாக்கப்படும் இந்த சொத்து தொடர்பாக, இதுவரை நடந்த பரிமாற்றங்கள் குறித்து பதிவுத்துறை வாயிலாக தெரிய வந்த விவரங்கள்:
 
*கடந்த, 2006 ஆகஸ்டில், இந்த நிலங்களை லோகம்மன், ரவி, வேலு, ராஜேஸ்வரி, லதா, கவிதா, பிரேமா, கண்ணன் ஆகியோரிடமிருந்து, லதா ரஜினிகாந்த், ரேணுகா ரவிசங்கர் பெயருக்கு மாற்றப்பட்டது.
 
* இந்த நிலங்கள், லதா ரஜினிகாந்த் பெயரில் இருந்து இந்தியன் வங்கி பெயருக்கு ஒரு கடனுக்காக, 2007ல் மாற்றப்பட்டது.
 
*கடந்த, 2011ல் இந்தியன் வங்கியிடமிருந்து இதற்கான ஆவணம், லதா ரஜினியின் பெயருக்கே வருகிறது.
 
* இதன் பின், 2011ல் லதா ரஜினி பெயரில் இருந்து, 'மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் பெயருக்கு ஆவண ஒப்படைப்பாக மாறுகிறது.
 
*இதில், 'மீடியா ஒன்' நிறுவனம் கடனை செலுத்தாததால், இந்த சொத்து, 'எக்சிம்' வங்கியின் உடைமையாகிறது.

No comments:

Post a Comment