.

.

Friday, August 22, 2014

ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி!!!

22nd of August 2014
சென்னை:காதல் நாயகனாக பிரபலமாகி, ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்து தற்போது குடும்பக் கதை நாயகனாக பரத் நடித்திருக்கும் படம் தான் 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி'.

18 ஆயிரம் கேட்டால் 20 ஆயிரம் கொடுப்பது, 100 ரூபாய்க்கு 200 ரூபாய் கொடுப்பது, என்று சுத்தமாக எழுதப் படிக்கத் தெரியாத பரத், தனது குடும்ப தொழிலான சித்த வைத்தியத்தை செய்து வருகிறார். பரத்தின் படிப்பின்மையை பயன்படுத்தி அவருடைய நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் அவரை ஏமாற்றி வருகிறார்கள். இதனால், படித்த பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்க பரத்தின் அம்மா முடிவு செய்கிறார். ஆனால், பரத் படிக்காததால் அவருக்கு படித்த பெண்களை கொடுக்க யாரும் முன்வருவதில்லை. இதனால், திருமண புரோக்கரின் ஆலோசனைப்படி, படித்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொள்ள முடிவு எடுக்கும் பரத், கல்லூரி வாசலில் தனது காதல் பணிக்கு அச்சாரம்  போடுகிறார்.

அந்த கல்லூரியில் நந்திதாவை பார்க்கும் பரத், இவர் தான் தனது மனைவி என்று முடிவு செய்து அவரை தொடர்ந்து செல்ல, நந்திதாவின் அப்பா தம்பிராமையா, சித்த வைத்தியர் பரத்தை எம்.பி.பி.எஸ் டாக்டர் என்று தவறாக நினைத்துக்கொண்டு தனது பெண்ணை பரத்துக்கு திருமணம் செய்துகொடுக்க முடிவு செய்கிறார்.

இதற்கிடையில், பரத்தை ஏமாற்றி வாழ்க்கையை ஓட்டும்  அவருடைய நண்பர்கள், படித்த பெண்ணை பரத் திருமணம் செய்துகொண்டால் அவரை  தொடர்ந்து ஏமாற்ற முடியாது என்று எண்ணி, அவருடைய திருமணத்தை நிறுத்த முயற்சி செய்கிறார்கள்.

இந்த முயற்சிகளை முறியடித்து நந்திதாவை பரத் கரம் பிடிக்கிறார். தனது மனைவி படித்தவள் என்று பரத்தும், தனது மருமகள் படித்தவள் என்று பரத்தின் அம்மா ரேணுகாவும் நந்திதாவுக்கு குடும்ப பொறுப்புகளை கொடுக்க, அங்கே தான் தெரிகிறது நந்திதாவும் எழுத படிக்க தெரியாதவர் என்று.

பரத்தின் அம்மாவைப் போல, தம்பிராமையாவும் படிக்காத தனது மகளுக்கு படித்த மாப்பிளையை மணம் முடிக்க, இருவரும் ஒருவருக்கொருவர் தங்களை ஏமாற்றிக் கொண்டதால், உண்மை தெரியாமல் இருக்க அவர்களின் சமாளிப்பும், அதனால் சந்திக்கும் பிரச்சனைகளும், அந்த பிரச்சனைகளால் ஏற்படும் விளைவுகளையும், காமெடியுடன் குடும்ப பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் எல்.ஜி.ரவிச்சந்தர்.

முதல் முறையாக பரத் காமெடி பக்கம் வந்திருக்கிறார். எழுத படிக்க தெரியாத தனது முட்டாள் தனத்தால் அவர் ஏமாறும் போது நமேக்கே அவர் மீது பரிதாபம் வருகிறது. காதல், காமெடி, அவ்வபோது ஆக்ஷன் என்று தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.

நந்திதாவும் எப்போதும் போல, பக்கத்து வீட்டு பெண்ணாக தோன்றினாலும், இந்த படத்தில் சற்று நடனம் ஆடுவதுதான்  கமர்ஷியல் நாயகியாவதற்காக சிறு முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.

தம்பிராமையாவின் சோலோ நகைச்சுவை நமக்கு சிரிப்பு வரவைக்கவில்லை என்றாலும், சாம்ஸுடன் சேர்ந்து அவர் செய்யும் முட்டை காமெடி நமக்கு கிச்சு கிச்சு மூட்டுகிறது.

மனோபாலா, இமான் அண்ணாச்சி, சிங்கம் புலி, படவா கோபி, சூது கவ்வும் கருணாகரன், மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர்    என்று படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தும் நகைச்சுவை ஊறுகாய் அளவுக்கே உள்ளது.

சிமொனின் பாடல்கள் ரசிக்கவும், தாளம் போடவும் வைக்கிறது. பிரமிக்க வைக்க கூடிய அளவுக்கு பி.ஜி.முத்தையாவின் கேமரா  எதையும் செய்யவில்லை என்றாலும், நம் கண்களை  உறுத்தாமல் காட்சிகள் அனைத்தையும் ரொம்பவே தெளிவாக காட்டுகிறது.

செல்வங்களில் சிறந்த செல்வம் கல்வி தான் என்பதையும், படிப்பறிவு இல்லாத மனிதன் இந்த சமூகத்தில் எப்படி கஷ்ட்டப்படுவார் என்பதையும் நகைச்சுவையாகவும், செண்டிமெண்டாகவும் இயக்குனர் சொல்லியிருக்கும் விதத்திற்காக சபாஷ் போடலாம்.

தற்போதைய தமிழ் சினிமாவின் டிரெண்ட் எதுவாக இருந்தாலும், இதுபோன்ற படங்களுக்காக தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில், 80 களில் தமிழ் சினிமா இயக்குனர்கள் கடைபிடித்து வந்த பார்முலாவில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் ரவிச்சந்திரன்.

நாயகன்  அறிமுகம், நாயகி அறிமுகம், பிறகு ஒரு பாடல், அதற்கு பிறகு ஒரு பைட், பிறகு ஒரு டிவிஸ்ட், சோகம், பாசம், க்ளைமாக்சுக்கு முன்னாடி ஒரு பைட், ஒரு எதிர்ப்பார்ப்பு என்று பாக்யராஜியின் பாணியில் இப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் எல்.ஜி.ரவிச்சந்தர், சீரியல் பக்கம் ஈர்க்கப்பட்ட தாய்க்குலங்களை, மீண்டும் சினிமா பக்கம் ஈர்க்க முயற்சித்திருக்கிறார்.

No comments:

Post a Comment